வரவிருக்கும் பொசோன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, கேகாலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் "சத் யாலோக" பொசோன் வலயம் – 2026 தொடர்பான அடிப்படை திட்டங்கள் குறித்து விசேட கலந்துரையாடல் நேற்று (02) கேகாலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட செயலாளர்/அரசாங்க அதிபர் கே.ஜி.எஸ். நிஷாந்த அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இப்பொசோன் வலயம் எதிர்வரும் மாதம் 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களில் மாலை 6.00 மணி முதல் நள்ளிரவு வரை கேகாலை சுதந்திர மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த இரு நாட்களிலும் வேசாக் கூடுகள் மற்றும் விளக்குக் கூடுகள் போட்டி மற்றும் கண்காட்சி, பௌத்த பக்தி கீத நிகழ்ச்சிகள், பௌத்த நாடகங்கள், தானசாலைகள், விற்பனைச் சாவடிகள் (சல்பில்) மற்றும் தோரணக் கண்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு சமய மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
மேலும், இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்காக சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொறுப்புகள், தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட மற்றும் பிராந்திய பாதுகாப்புப் படைகள், அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், அரச சார்பற்ற அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள், வர்த்தக சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பைப் பெறுவது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் துணை பிரதம சங்கநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினர், ஓய்வு பெற்ற பிரதி அதிபர், பின்னவல பிரதேச சபை தலைவர், கேகாலை மாநகர சபை தலைவர், பின்னவல ஸ்ரீ சுதர்ஷனாராம விகாரையின் விகாராதிபதி தேரர், துனுகெவத்த சீலவிமல தேரர், அரசியல் பிரதிநிதிகள், மேலதிக மாவட்ட செயலாளர்கள், அரச அதிகாரிகள் மற்றும் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




















