பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் செயல்படும் தேசிய ஆரம்பக் குழந்தைப் பருவ அபிவிருத்தி செயலகம், "குழந்தைகளின் வளமான உலகிற்காக – சூரியக் கதிர்களைப் போன்ற அன்பான குடும்பம்" என்ற கருப்பொருளின் கீழ் ஜூலை 14 முதல் 20 வரை தேசிய ஆரம்பக் குழந்தைப் பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி வாரத்தை முன்னெடுத்து வருகிறது. இந்நிகழ்ச்சியின் நோக்கம், உடல், உள-சமூக மற்றும் அறிவாற்றல் ரீதியாக ஆரோக்கியமான இலங்கை குழந்தைகள் தலைமுறையை உருவாக்குவதாகும்.

அந்த தேசிய வாரத்தின் ஐந்தாவது நாளை முன்னிட்டு, தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களை வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் "செனெஹே தடாகய" (அன்பின் குளம்) வீட்டை அடிப்படையாகக் கொண்ட ஆரம்பக் குழந்தைப் பராமரிப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டத்துடன் இணைந்து, தேசிய அனுபவப் பகிர்வு நிகழ்ச்சி இன்று (18) கேகாலை மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

"செனெஹே தடாகய" திட்டம் தற்போது கேகாலை மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய நிகழ்ச்சியில் யட்டியந்தோட்டை, தெஹியோவிட்ட, தெரணியகல மற்றும் ருவன்வெல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட குடும்பங்கள், திட்டத்தில் பங்கேற்ற தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வை இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் துமிந்த குருகே வழிநடத்தினார்.

இந்நிகழ்ச்சி, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் தேசிய ஆரம்பக் குழந்தைப் பருவ அபிவிருத்தி செயலகத்தின் வழிகாட்டுதலின் கீழ், கேகாலை மாவட்ட ஆரம்பக் குழந்தைப் பருவ அபிவிருத்தி அலுவலர் திருமதி சுதாரிகா சந்திரசிறி மற்றும் மாவட்ட ஆரம்பக் குழந்தைப் பருவ அபிவிருத்தி அலுவலர்களின் ஒருங்கிணைப்புடன், கேகாலை மாவட்டச் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் டாக்டர் நாமல் சுதர்ஷன, கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சாகரிகா கங்கனி அத்தஉத, கேகாலை பிரதி மேயர், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி தரங்கனி விக்ரமசிங்க, அமைச்சின் மேலதிக செயலாளர், கேகாலை மாவட்டச் செயலாளர் திரு கே. ஜி. எஸ். நிஷாந்த, கேகாலை மேலதிக மாவட்டச் செயலாளர்கள், அரச உயர் அதிகாரிகள், தேசிய ஆரம்பக் குழந்தைப் பருவ அபிவிருத்தி செயலகத்தின் பணிப்பாளர் திருமதி நிரூஷிகா தனசேகர மற்றும் அச் செயலக அதிகாரிகள், மாவட்ட ஆரம்பக் குழந்தைப் பருவ அபிவிருத்தி அலுவலர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.