கேகாலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளுடன் தொடர்புடைய பல்வேறு துறைகளில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் மற்றும் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், கேகாலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (30) சுற்றாடல் அமைச்சர் மற்றும் கேகாலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரான கலாநிதி தம்மிக்க படபெந்தி அவர்களதும், கேகாலை மாவட்ட செயலாளர் கே. ஜி. எஸ். நிஷாந்த அவர்களதும் தலைமையில் நடைபெற்றது.
உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய எல் நினோ (El Niño) நிலைமை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல்களுக்கு அமைய, உலகளாவிய ரீதியிலும் இலங்கைக்குள்ளும் எல் நினோ நிலைமையில் சில மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகவும், அதன் தாக்கம் சுமார் 97 சதவீதம் வரை காணப்படுவதாகவும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் விளக்கமளித்தார். எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மழைவீழ்ச்சி குறைவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், தற்போது கேகாலை மாவட்டத்தில் எல் நினோ நிலைமையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நாட்டில் குறைவான மழைவீழ்ச்சியும், செப்டெம்பர் மாதத்தில் சபரகமுவ மாகாணத்தில் சாதாரண அளவிலான மழைவீழ்ச்சியும் கிடைக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
சர்வதேச எதிர்வுகூறல்களின்படி 2027 ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இலங்கையில் குறைவான மழைவீழ்ச்சி ஏற்படக்கூடும் என்பதால், எதிர்வரும் காலப்பகுதியில் மலைப்பகுதிகளில் ஏற்படக்கூடிய தீ, குடிநீர் தேவைகள் மற்றும் வறட்சியான காலநிலையினால் விவசாயத் துறைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டியதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டது. எல் நினோ நிலைமைக்கு முகங்கொடுப்பதற்கு முன்னர் முன்னேற்பாடுகளை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது என இக்கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
கேகாலை மாவட்டத்தில் டெங்கு நோய் அபாயம்
கேகாலை மாவட்டத்தில் நிலவும் டெங்கு நோய் அபாயம் தொடர்பிலும் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இந்த வருடத்தில் 31 வார காலப்பகுதியில் கேகாலை மாவட்டத்தில் 2,325 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. 26 வாரங்களுக்குப் பின்னர் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக மாவனெல்ல, தெஹியோவிட்ட, வரக்காபொல மற்றும் கேகாலை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.தற்போதைய அதிக வெப்பநிலை காரணமாக நுளம்புகளின் வாழ்க்கைச் சுழற்சி முன்னர் காணப்பட்ட 7–9 நாட்களிலிருந்து 5 நாட்களாக குறைவடைந்துள்ளதாகவும், எதிர்வரும் காலத்தில் அது மேலும் வேகமடைந்து சுமார் 3 நாட்கள் வரை குறைவடையக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. நுளம்புகளின் வாழ்க்கைச் சுழற்சியில் ஏற்பட்டுள்ள மாற்றத்துடன், ருவன்வெல்ல, மாவனெல்ல, வரக்காபொல, தெஹியோவிட்ட மற்றும் கேகாலை ஆகிய பகுதிகளில் டெங்கு பரவல் தொடர்பில் தொடர்ந்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.டெங்கு நோய் பரவும் குழுக்களின் (Dengue Clusters) எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டுள்ளதுடன், அரச நிறுவனங்களில் டெங்கு பரவலை 69 சதவீதம் வரை குறைக்க முடிந்திருப்பது இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் வெற்றிகரமான பெறுபேறாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.கேகாலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பாடசாலைகளில் டெங்கு பரவல் 54 சதவீதமாக காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்துடன் இணைந்து, 2026 ஜூலை 31 ஆம் திகதி அனைத்து அரச நிறுவனங்களிலும் விசேட டெங்கு ஒழிப்பு தினமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அன்றைய தினம் உரிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது. இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள அனைத்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளையும் எதிர்காலத்திலும் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய இலங்கை இராணுவம், பிரதேச சபைகள், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை விமானப்படை உள்ளிட்ட ஏனைய நிறுவனங்களுக்கும் இங்கு விசேட நன்றி தெரிவிக்கப்பட்டது.
கேகாலை மாவட்ட எல்லைக் குழுவின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துதல்
கேகாலை மாவட்ட எல்லைக் குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.2026 ஆம் ஆண்டுடன் தொடர்புடைய மாகாண அல்லது மாவட்ட எல்லைத் திருத்தங்கள், புதிய பிரதேச செயலகப் பிரிவுகளை நிறுவுதல், பிரதேச செயலகப் பிரிவுகளின் எல்லைகளைத் திருத்துதல், கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் எல்லைகளைத் திருத்துதல், கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை ஒன்றிணைத்தல் மற்றும் பிரித்தல் உள்ளிட்ட ஆறு அடிப்படை விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.மேலும், முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளின் எண்ணிக்கை, திருத்தப்பட வேண்டிய முன்மொழிவுகள், பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுவிற்கு இதுவரை சமர்ப்பிக்கப்படாத முன்மொழிவுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.பிரதேச செயலக மட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள எல்லைத் திருத்த முன்மொழிவுகள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்து மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாகம்) திருமதி குசும் பண்டார அவர்கள் விளக்கமளித்தார்.குறித்த விடயங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் உரிய இணக்கப்பாட்டிற்கு வந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.


















