2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் மாவட்ட மற்றும் அகில இலங்கை மட்டங்களில் வெற்றிகளைப் பெற்ற கேகாலை மாவட்ட மாணவர்களைப் பாராட்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட மற்றும் அகில இலங்கை மாணவர் திறன் விருது வழங்கும் விழா நேற்று (30) வட்டாரம ஸ்ரீ அரஹத் மல்லியதேவ ராஜமஹா விகாரையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்படி, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் அகில இலங்கை மட்டத்தில் வெற்றிகளைப் பெற்ற ஏழு மாணவர்களுக்கு விசேட சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டதுடன், அந்த மாணவர்கள் கல்வி கற்கும் தம்ம பாடசாலைகளுக்கும் விசேட கௌரவ நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன. மேலும், 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட மாணவர் திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற தம்ம பாடசாலை மாணவர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இவ்வாண்டு விழாவின் மற்றுமொரு சிறப்பம்சமாக, சாசனத்தின் முன்னேற்றம் மற்றும் தம்ம பாடசாலை கல்வியின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய கேகாலை மாவட்ட மற்றும் பிரதேச சாசனாரக்ஷக பல மண்டலங்களின் கௌரவ தலைவர்கள் மற்றும் செயலாளர்களான தேரர்களைப் பாராட்டி கௌரவிப்புகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இதன்படி, 33 தேரர்களுக்கு கௌரவங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சமய அனுசாசனத்தை வழங்குவதற்காக அகில இலங்கை சாசனாரக்ஷக மண்டலத்தின் கௌரவ செயலாளர் வணக்கத்திற்குரிய முகுணுவல அனுருத்த நாயக்க தேரர் அவர்கள் கலந்து கொண்டதுடன், சாசனத்திற்காக அவர் ஆற்றிய அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டி விசேட கௌரவமும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், “மவ்பியகுண” (பெற்றோர் குணப்பாடல்) போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களும், பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களும் தமது திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
மேலும், தேவாலேகம சஸ்ஷ்ரீ கலாயதனயாவின் மாணவர்களால் வழங்கப்பட்ட சிறப்பான நடன நிகழ்ச்சிகள் பலவும் விழாவை மேலும் சிறப்பித்தன.
கேகாலை மாவட்ட சாசனாரக்ஷக பல மண்டலம், பிரதேச சாசனாரக்ஷக பல மண்டலங்கள், கேகாலை மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் பௌத்த அலுவல்கள் ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் அனுசரணையாளர்களின் ஒத்துழைப்புடன் இம்முறை மாவட்ட மற்றும் அகில இலங்கை மாணவர் திறன் விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட மற்றும் பிரதேச சாசனாரக்ஷக பல மண்டலங்களின் கௌரவ தலைவர்கள் மற்றும் செயலாளர்களான தேரர்கள், கலிகமுவ பிரதேச சபையின் தலைவர் திரு. ஆர். எல். ராஜபக்ஷ, கேகாலை மாவட்ட செயலாளர் திரு. கே. ஜி. எஸ். நிஷாந்த, மேலதிக மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர் திரு. காஞ்சன வெலிபிட்டிய அவர்களின் ஒருங்கிணைப்பு செயலாளர், அரச உத்தியோகத்தர்கள், தம்ம பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.






























