மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கீழ் செயற்படும் உபகுழுவான மாவட்ட திட்டமிடல் குழு நேற்று (01) கேகாலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கூடியது.
மாவட்ட திட்டமிடல் குழு மாதாந்தம் கூடி, அபிவிருத்தி முன்மொழிவுகளை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களின் அடிப்படையில் செயற்பட்டு வருகின்றது. இம்முறை நடைபெற்ற கூட்டத்திலும் பல முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
தற்போது இவ்வருடத்திற்காக கேகாலை மாவட்ட செயலகத்தின் கீழ் மொத்தம் 1,177 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. பரவலாக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிகழ்ச்சித்திட்டங்கள், பிரஜா சக்தி நிகழ்ச்சித்திட்டங்கள், பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள், கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் கிராமிய பாலம் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இத்திட்டங்களின் முன்னேற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள பிரச்சினைகளை அடையாளம் கண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், ஒட்டுமொத்த திட்டங்களின் முன்னேற்றத்தை 60% வரை உயர்த்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
கேகாலை மாவட்டத்தில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணித்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அதிக ஆபத்துள்ள பகுதிகளில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் முற்றாக சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கும் நடவடிக்கைகளின் முன்னேற்றமும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்கள், சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டங்கள், மாவட்ட மட்டத்திலான விவசாய நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் முன்னேற்றம் ஆகியனவும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டன.
கேகாலை மாவட்டத்திற்காக நடைமுறைப்படுத்தப்படும் நான்கு வருட மூலோபாய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் எட்டு முக்கிய துறைகளை உள்ளடக்கும் வகையில் குழுக்கள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன. இக்குழுக்கள் தேவையான முன்மொழிவுகளைத் தயாரித்தல் மற்றும் உரிய கலந்துரையாடல்களை மேற்கொள்வதில் ஈடுபட்டு வருகின்றன. அவற்றின் தற்போதைய முன்னேற்றமும் கூட்டத்தில் மீளாய்வு செய்யப்பட்டது.
நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கேகாலை மத்திய பேருந்து நிலைய அபிவிருத்தி தொடர்பான கருத்திட்ட முன்மொழிவுக்கும், கேகாலை நகர மத்திய நகர்ப்புற பூங்கா அபிவிருத்தித் திட்டத்திற்கும் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கீழ் இவ்வருடம் 8 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் 3 திட்டங்கள் ஏற்கனவே முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 2 திட்டங்கள் 50% முன்னேற்றத்தை அடைந்துள்ளன. முன்மொழியப்பட்ட யட்டிமஹன நீர்த்தேக்கத் திட்டம் தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டன. இத்திட்டத்தின் மூலம் சுமார் 10 இலட்சம் குடும்பங்கள் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வருடம் ஜூன் மாதம் முதல் ரப்பர் அபிவிருத்தித் திணைக்களத்தினால் கைவிடப்பட்டு, ரப்பர் பால் வெட்டப்படாமல் காணப்படும் முதிர்ச்சியடைந்த ரப்பர் தோட்டங்களை மீளப் புனரமைக்கும் நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை 100 ஹெக்டேயருக்கும் அதிகமான நிலப்பரப்பை உள்ளடக்கும் வகையில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கேகாலை மாவட்டத்தில் வருடத்தின் பெரும்பாலான காலப்பகுதியில் நிலவும் மழைவீழ்ச்சி காரணமாக ரப்பர் பால் வெட்டுதல் குறைந்த மட்டத்தில் காணப்படுவதால், மழைப் பாதுகாப்பு உறைகள் (Rain Guards) பயன்படுத்தி ரப்பர் பால் வெட்டுதலை ஊக்குவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
இதற்கிடையில், மூன்று வருட காலத்திற்குள் நாடு முழுவதும் 250 தென்னை கிராமங்களை நிறுவும் நோக்கில் தேசிய தென்னை தினக் கொண்டாட்டம் இன்று நடைபெறுகின்றது. கேகாலை மாவட்ட மட்டத்திலான கொண்டாட்ட நிகழ்வு இன்று வரக்காபொல பிரதேச செயலகப் பிரிவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
மேற்குறிப்பிட்ட விடயங்களுக்கு மேலதிகமாக, மாவட்டத்தில் செயற்பட்டு வரும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அரச திணைக்களங்களின் முன்னேற்றமும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.
திட்டங்களின் முன்னேற்றம் குறைந்த மட்டத்தில் காணப்படும் துறைகள் தொடர்பில் மேலும் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் அவசியம் மற்றும் மீள்குடியேற்றச் செயற்பாட்டை துரிதப்படுத்துதல் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபெந்தி, மாவட்டத்தின் அரசியல் அதிகாரசபையின் உறுப்பினர்கள், சபரகமுவ மாகாண சபையின் பிரதம செயலாளர் ஜே. எம். யூ. கே. ஜயசேகர, கேகாலை மாவட்ட செயலாளர் கே. ஜீ. எஸ். நிஷாந்த, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இந்திக சேனாரத்ன, பிரதேச செயலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பல்வேறு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

























