மாவட்ட விவசாயக் குழுவின் கூட்டம் 2026 செப்டம்பர் 08 ஆம் திகதி கேகாலை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில், கேகாலை மாவட்டச் செயலாளர் திரு. கே. ஜி. எஸ். நிஷாந்த அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, முதலில் கடந்த குழுக் கூட்டங்களில் கலந்துரையாடப்பட்ட பிரச்சினைகள் மற்றும் சிக்கல்கள், அத்துடன் இம்முறை குழுக் கூட்டத்திற்காக கிடைக்கப்பெற்ற கடிதங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மாகாண விவசாயத் திணைக்களத்தின் பிரதி விவசாயப் பணிப்பாளர் அவர்கள், 2026/27 ஆம் ஆண்டிற்குரிய எல் நினோ நிலைமை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள காலநிலை முன்னறிவிப்பு குறித்து குழுவினருக்கு விளக்கமளித்தார். அந்த முன்னறிவிப்பின்படி, 2026/27 பெரும்போகத்தின் ஆரம்பத்துடன் ஒக்டோபர் மாத இறுதியிலிருந்து நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் அதிகளவான மழைவீழ்ச்சி கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக மாவட்டத்தில் நெற் பயிர்ச்செய்கையை விரைவாக நிலைநிறுத்துவதன் மூலம் அதிக மழை காரணமாக நெற் பயிர்கள் அடித்துச் செல்லப்படுவதையும் நாற்றுகள் பிடுங்கப்படுவதையும் குறைந்தபட்ச மட்டத்தில் பேண முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
மழைவீழ்ச்சி குறைந்ததன் காரணமாக சிறுபோக விவசாய நடவடிக்கைகள் தாமதமடைந்துள்ளதாகவும், செப்டம்பர் 15 ஆம் திகதியளவில் சிறுபோகப் பருவம் நிறைவடைந்து பெரும்போகப் பருவம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுள்ள நிலையில், தற்போது அறுவடை தாமதமடைந்துள்ள பெருமளவான வயல்கள் மாவட்டத்தில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே, அறுவடை நிறைவடைந்த உடனேயே மழையுடன் நிலத்தைத் தயார்செய்து பயிர் நிலைநிறுத்தல் நடவடிக்கைகளை விரைவாக நிறைவு செய்ய வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், 2027 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் வறண்ட காலநிலை நிலைமை ஏற்படக்கூடும் என்பதால், அந்தக் காலப்பகுதியில் பெரும்போகப் பயிர்களின் அறுவடையை ஆரம்பிப்பதற்குத் தேவையான முன் தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அன்றைய தினம் நடைபெற்ற விவசாயக் குழுக் கூட்டத்துடன் இணைந்ததாக சுற்றாடல், காணிப் பயன்பாடு மற்றும் அனர்த்த முகாமைத்துவக் குழுக்களும் கூடி, தத்தமது துறைகளில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பாக கலந்துரையாடின.
எல் நினோ நிலைமையின் கீழ் நெற் பயிர்ச்செய்கைக்காக பரிந்துரைக்கப்பட்ட நிலைபேறான விவசாய வழிகாட்டுதல்கள் தொடர்பாகவும் இதன்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மழை ஆரம்பித்தவுடன் நிலத்தைத் தயார்செய்து, ஒக்டோபர் 15 ஆம் திகதிக்கு முன்னர் பயிர் நிலைநிறுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்வது, நவம்பர் மாதத்தில் ஏற்படக்கூடிய வெள்ள நிலைமைகள் மற்றும் 2027 ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஏற்படக்கூடிய வறட்சி நிலைமைகளின் தாக்கத்தைக் குறைப்பதற்கு முக்கியமானதாகும் என சுட்டிக்காட்டப்பட்டது.
முடிந்தவரை மூன்றரை மாத மற்றும் மூன்று மாத வயதுடைய நெல் இனங்களைப் பயன்படுத்துமாறும் பரிந்துரைக்கப்பட்டது. பயிர் நிலைநிறுத்தலின் போது மூன்றரை மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய இனங்களுக்கு நாற்று நடுகை முறையைப் பயன்படுத்த வேண்டும் எனவும், நாற்றுகளை விதைப்பதற்கு பரசூட் மற்றும் டபொக் (Dapog) முறைகளை எந்தவொரு வயதுப் பிரிவிற்கும் பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், வெள்ள அபாயத்திற்கு உட்படாத இடங்களில் நாற்றங்காலைகளை அமைக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டது.
வெள்ளம் காரணமாக நாற்றுகளின் எண்ணிக்கை குறைந்தால், அதனை மீளச் சீரமைப்பதற்காக தேவையான சந்தர்ப்பங்களில் மாத்திரம் மேலதிக நாற்றங்காலைப் பேணுவதும் பரிந்துரைக்கப்பட்டது. வெள்ளம் காரணமாக பயிர்ச்செய்கை முழுமையாக அழிவடைந்தால், மீண்டும் பயிர்ச்செய்கையை நிலைநிறுத்துவதற்காக இரண்டரை மாத அல்லது மூன்று மாத குறுகிய காலப் பயிர் இனங்களைத் தெரிவுசெய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
எல் நினோ நிலைமையை எதிர்கொள்வதற்கான மற்றுமொரு நடவடிக்கையாக, பாதுகாக்கப்பட்ட விவசாயப் பயிர்ச்செய்கையாளர்களின் கூட்டுறவுச் சங்கங்களை (Protected Agriculture Cultivators’ Cooperative Societies – PACS) அமைப்பதற்கான முன்னோடித் திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் கேகாலை, மாவனெல்ல மற்றும் ருவன்வெல்ல ஆகிய மூன்று வலயங்களிலிருந்தும் தலா 10 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டு, மொத்தமாக 30 பேர் இத்திட்டத்திற்காக ஈடுபடுத்தப்படவுள்ளனர். எல் நினோ நிலைமையை எதிர்கொள்வதற்கான ஒரு நடவடிக்கையாக பாதுகாக்கப்பட்ட இல்ல விவசாயம் மற்றும் கொள்கலன் விவசாயத்தை ஊக்குவிப்பதும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு முன்னர் தேயிலை நாற்றுகளை நிரந்தரமாக நிலத்தில் நடுவதற்குத் தேவையான தேயிலை நாற்றுகளை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
தேசிய உரச் செயலகத்தின் மாவட்டப் பிரதி பணிப்பாளர் திரு. டி. எம். எஸ். தென்னகோன் அவர்கள் தெரிவித்ததன்படி, தற்போது உரங்களின் விலையில் ஓரளவு குறைவு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், மாவட்டத்தில் புதிதாக 12 உர விற்பனை நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும், அவை உட்பட மாவட்டத்தில் உள்ள மொத்த உர விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாகிஸ்தான் சந்தையை இலக்காகக் கொண்டு மாவட்டத்தில் அன்னாசிப் பயிர்ச்செய்கையாளர்களைப் பதிவு செய்வதற்காக, பயிர்ச்செய்கையாளர்களின் தகவல்களைத் திரட்டுவது தொடர்பாக மாகாண விவசாயத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் குறித்தும் அன்றைய குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டத்தில் மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி) திரு. திலிப் நிஷாந்த, பிரதேச செயலாளர்கள், மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி நில்மா ராஜபக்ஷ, மாவட்ட விவசாயப் பணிப்பாளர் திருமதி அனோமா சேனாரத்ன, திட்டமிடல் பணிப்பாளர் திருமதி இந்திகா சேனாரத்ன, கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் திரு. பி. ஏ. சாமிந்த பத்ம குமார, மாவட்ட விவசாயிகள் அபிவிருத்தி சம்மேளனத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட மாவட்ட விவசாயத் துறையுடன் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


















