உலக சிறுவர் தினம் மற்றும் உலக முதியோர் தினத்தை முன்னிட்டு கேகாலை மாவட்டத்தின் விசேட கொண்டாட்ட நிகழ்வு இன்று (01) பின்னவலை மிருகக்காட்சிசாலையில் நடைபெற்றது. கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சாகரிகா கங்கானி அத்துடகோரள அம்மையார் மற்றும் கேகாலை மாவட்டச் செயலாளர்/அரசாங்க அதிபர் கே. ஜீ. எஸ். நிஷாந்த அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவ்வாண்டின் உலக சிறுவர் தினக் கொண்டாட்டம் “மனதை வலுப்படுத்தி – சிறுவர்களை வளப்படுத்துவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்றது. இதனையொட்டி கேகாலை, அரநாயக்க மற்றும் ரம்புக்கனை பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த முன்பள்ளிச் சிறுவர்களை ஒன்றிணைத்து இக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வின் போது சிறுவர்களின் பல்வேறு நடன நிகழ்ச்சிகள், ரம்புக்கனை முதியோர் அதிகார சபையைச் சேர்ந்த திருமதி எம். டி. ஆர். ஆரியலதா அவர்களால் சிறுவர்களுக்காகக் கதை சொல்லும் நிகழ்ச்சி, திறமைகளை வெளிப்படுத்திய சிறுவர்களுக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

இக்கொண்டாட்டத்தின் மற்றுமொரு விசேட அம்சமாக, பின்னவலை மிருகக்காட்சிசாலையில் உள்ள மக்காவ் கிளி, ஆட்டுக்குட்டி மற்றும் முள்ளம்பன்றி ஆகியவற்றைச் சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது. மேலும், டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கல்வி உதவிகளும் வழங்கப்பட்டன. இதற்கான முழுமையான அனுசரணையை காம் ஃபேஷன் (Kam Fashion) அரச சார்பற்ற நிறுவனம் வழங்கியது.

பின்னவலை மிருகக்காட்சிசாலைத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஓவியப் போட்டியில் வெற்றிபெற்ற சிறுவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. அத்துடன், நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பொதுமக்கள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டிக் கௌரவித்ததுடன், சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது.

மேலும், சிறுவர் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகள், மரநடுகை நிகழ்ச்சிகள், ஓவியப் போட்டிகள், மாணவர் தூதுவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி நிகழ்ச்சிகள் மற்றும் பெற்றோருக்குச் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விரிவுரைகள் ஆகியனவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ரம்புக்கனை பராக்கிரம வித்தியாலயத்தின் வீதி நாடகக் குழுவினரால் நிகழ்த்தப்பட்ட நாடகங்களும் விழாவிற்கு மேலும் சிறப்பூட்டின.

இந்நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திருமதி வினோதனி குலதுங்க, மாவட்ட உளசமூக உத்தியோகத்தர் திருமதி சதுரிகா பண்டார, மாவட்ட சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சுதாரிகா சந்திரசிறி மற்றும் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி காந்தி ஹேரத் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் ஒத்துழைப்பு வழங்கினர்.

அத்துடன், உலக மனநல தினத்தை முன்னிட்டு சிறுவர்களுக்கான ஓவியம் மற்றும் கலைச் சிகிச்சை நிகழ்ச்சியொன்றும் மாவட்ட உளவள ஆலோசனை உத்தியோகத்தர் திருமதி ரேணுகா ஜயரத்ன அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் அனைத்து உத்தியோகத்தர்களினதும் பங்களிப்புடனும், பிரதேச செயலகங்களின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு உத்தியோகத்தர்களினதும் பின்னவலை மிருகக்காட்சிசாலைத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளரினதும் ஒத்துழைப்புடனும் இக்கொண்டாட்ட நிகழ்வு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

கேகாலை மேலதிக மாவட்டச் செயலாளர் (நிர்வாகம்) திருமதி குசும் பண்டார, மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி) திரு. திலீப் நிஷாந்த, ரம்புக்கனை பிரதேச செயலாளர் திருமதி நர்மதா எகொடகெதர, உதவி மாவட்டச் செயலாளர் திருமதி மால்ஷா எல். பியதர்ஷனி, பின்னவலை மிருகக்காட்சிசாலையின் பிரதிப் பணிப்பாளர் திருமதி திலானி அமரசிங்க, கேகாலை மற்றும் ரம்புக்கனை பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலகத்தின் பணியாளர்கள், பிரதேச செயலகங்களின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவுகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.