போசோன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 85ஆவது முறையாக நடைபெறவுள்ள கேகாலு மிஹிந்து மகா பேரஹெரா தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (02) சுற்றுச்சூழல் அமைச்சர் டாக்டர் தம்மிக்க படபந்தே அவர்களின் தலைமையிலும், கேகாலை மாவட்ட செயலாளர்/அரசாங்க அதிபர் கே.ஜி.எஸ். நிஷாந்த அவர்களின் இணைத் தலைமையிலும் கேகாலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில், கேகாலு மிஹிந்து மகா பேரஹெராவுடன் தொடர்புடைய யானைகள் ஒருங்கிணைப்பு, பேரணியின் அலங்காரம் மற்றும் நகர அலங்காரம், ஊர்வலப் பாதைகள், குடிநீர் வசதிகள், மின்சார வசதிகள், தற்காலிக கழிப்பறைகள், பேரணியிலும் அதைப் பார்வையிட வருவோருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள், மேலும் பேரணி நிறைவடைந்த பின் நகர சுத்திகரிப்பு உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளுடன் விரிவாக ஆராயப்பட்டது.
இதன்படி, எதிர்வரும் ஜூலை 4ஆம் தேதி இரவு நடைபெறவுள்ள 85ஆவது கேகாலு மிஹிந்து மகா பேரஹெராவை வெற்றிகரமாக நடத்த தேவையான அனைத்து ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் நான்கு கோரளைப் பிரதேசங்களின் பிரதம சங்கநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினர், ஹெம்மாதகம சித்தார்த்தன விகாரையின் விகாராதிபதி தேரர், கேகாலை நகர சபை தலைவர், ஓய்வுபெற்ற பிரதி கல்விப் பணிப்பாளர், மாவட்ட அரசியல் பிரதிநிதிகள், மேலதிக மாவட்ட செயலாளர்கள், அரச அதிகாரிகள், தாயகச் சங்க பிரதிநிதிகள் மற்றும் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




















