இலங்கையின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் மலையகத் தோட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்வித் துறையில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்கும் நோக்கில் தோட்டப் பாடசாலைகளின் அதிபர்களுடன் விசேட கலந்துரையாடல் நேற்று (17) கேகாலை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடல் பெருந்தோட்டக் கைத்தொழில் பிரதி அமைச்சர் திரு சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களும், கேகாலை மாவட்டச் செயலாளர் திரு ஜி. எஸ். நிஷாந்த ஜயவீர அவர்களும் தலைமையில் நடைபெற்றது.
இலங்கையில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்கும் தோட்டப் பாடசாலைகள் அதிகளவில் அமைந்துள்ள கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை, தெஹியோவிட்ட மற்றும் தரணியாகலை பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள தோட்டப் பாடசாலை முறைமையில் காணப்படும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றிற்கு விரைவான மற்றும் நடைமுறைசார் தீர்வுகளை வழங்குவதே இந்நிகழ்ச்சியின் பிரதான நோக்கமாகும்.
இதன்போது கேகாலை, மாவனெல்லை மற்றும் தெஹியோவிட்ட கல்வி வலயங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள், தோட்டப் பாடசாலைகளில் மேசைகள், நாற்காலிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை, மாணவர் சேர்க்கை குறைவு உள்ளிட்ட கல்வித் துறையுடன் தொடர்புடைய பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும், கலைப் பிரிவு (A/L Arts Stream) உள்ளிட்ட பாடவியல் துறைகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் மற்றும் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பாக பிரதி அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், மாவட்டத்தின் கல்வி வலயப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்கள் தங்களது பிரச்சினைகளை நேரடியாக முன்வைத்து, அவற்றிற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
அத்துடன், வரகாபொல மாடேனிய தோட்டப் பாடசாலையில் இந்து கலாசாரக் கல்வியை உயர்ந்த நிலைக்கு மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல், அதற்குத் தேவையான கலந்துரையாடல்களை நடத்தல் மற்றும் அதற்கான திட்ட அறிக்கையை கல்வி அமைச்சிற்கு சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கேகாலை மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி) திரு திலீப் நிஷாந்த, மாவட்ட மற்றும் கல்வி வலய அலுவலகங்களின் பணிப்பாளர்கள், தோட்டப் பாடசாலைகளின் அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





















