மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் உபகுழுவாகச் செயற்படும் மாவட்ட விவசாய அபிவிருத்திக் குழு, நேற்று (11) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கூடியது.

இதன்போது, மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் விவசாய அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றத்தை மீளாய்வு செய்து கலந்துரையாடுதல், நிலவும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கான தீர்வுகளை வழங்குதல், புதிய முன்மொழிவுகளைப் பரிசீலித்தல் மற்றும் தொடர்புடைய விடயங்களை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

மாவட்டத்தில் பயிரிடக்கூடிய மற்றும் தற்போது பயிரிடப்படாமல் உள்ள காணிகள் தொடர்பாகவும், பொருத்தமான நவீன விவசாயத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விளைச்சலை அதிகரித்தல், விவசாய உற்பத்திகளை முறையாகச் சேமித்து வைத்தல் மற்றும் விவசாயிகளுக்கான சந்தை வாய்ப்புகளை அடையாளம் காணுதல் தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல் நினோ (El Niño) நிலைமைகளை எதிர்கொள்வதற்காக விவசாயிகளை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சிகளை முன்னெடுத்தல் மற்றும் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற புதிய பிரதேசங்களை அடையாளம் காணுதல் தொடர்பாகவும் விசேடமாகக் கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வு மாவட்ட விவசாயப் பணிப்பாளர் திருமதி அனோமா சேனாரத்ன உள்ளிட்ட தொடர்புடைய விவசாய அதிகாரிகளின் பங்கேற்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கஞ்சன வெலிபிட்டிய, மாவட்டச் செயலாளர் திரு. கே. ஜி. எஸ். நிஷாந்த உள்ளிட்ட மாகாண விவசாயத் திணைக்களம், விவசாய அபிவிருத்தித் திணைக்களம், ஏற்றுமதி விவசாயத் திணைக்களம், மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களம், உர நிறுவனங்கள் மற்றும் விவசாயத் துறையுடன் தொடர்புடைய பல்வேறு நிறுவனங்களின் அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.