போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வரக்காபொல மாற்று வீதி அபிவிருத்தித் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் இன்று (24) போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் திரு. பிரசன்ன குணசேன அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டன.
கேகாலை மாவட்டத்திற்கான முக்கிய நுழைவாயிலாகக் கருதப்படும் வரக்காபொல நகரம் நீண்ட காலமாக கடுமையான போக்குவரத்து நெரிசலை எதிர்கொண்டு வந்தது. இப்பிரச்சினைக்குத் தீர்வாக 2021 ஆம் ஆண்டில் இந்த மாற்று வீதித் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், அக்காலத்தில் நிலவிய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சூழ்நிலைகள் காரணமாக அது அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டது.
இந்த மாற்று வீதியின் நிர்மாணம் கேகாலை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதோடு, கேகாலை நகரம் ஊடாகப் பயணிக்கும் மக்களுக்கும் கண்டி மாவட்டத்திற்குச் செல்லும் மக்களுக்கும் அதிக வசதியை ஏற்படுத்தும். மேலும், குருநாகல் மாவட்டத்திற்கும் வட மத்திய மாகாணத்திற்கும் பயணிக்கும் போது போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயண நேரத்தை மிச்சப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கும் குறிப்பிடத்தக்க நன்மை கிடைக்கும்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) மேற்பார்வையின் கீழ், மாகா இன்ஜினியரிங் (தனியார்) நிறுவனம் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்காக ரூபாய் 4,988 மில்லியன் மதிப்பிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிர்மாணிக்கப்படவுள்ள இந்த வீதி 2.32 கிலோமீற்றர் நீளமும், 7 மீற்றர் அகலமும் கொண்ட இருவழிப் பாதையாக அமைக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் திரு. மனோஜ் ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாகரிகா கங்காணி அதாவுத, பாராளுமன்ற உறுப்பினர் திரு. கஞ்சன வலிபிட்டிய, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி நந்தன மில்லகல, வரக்காபொல பிரதேச சபையின் தலைவர் திரு. சந்தன எதிரிசிங்க உள்ளிட்ட அரசியல் அதிகாரிகள், கேகாலை மாவட்ட செயலாளர் திரு. கே. ஜி. எஸ். நிஷாந்த, வரக்காபொல பிரதேச செயலாளர் திரு. ரங்கன சஜீவ, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள், ஏனைய அரச அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் பலரும் கலந்துகொண்டனர்.





















