கீழ் கடுகன்னாவ பிரதேசத்தில் மண்சரிவு அபாய வலயங்களில் வசிக்கும் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்களையும், அனைத்து பங்குதாரர்களையும் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சியொன்று இன்று (11) கேகாலை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. கே. ஜி. தர்மதிலக்க மற்றும் கேகாலை மாவட்டச் செயலாளர் திரு. கே. ஜி. எஸ். நிஷாந்த ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

கொழும்பு–கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதியில் 96ஆம் கிலோமீற்றர் தூணிலிருந்து 99ஆம் கிலோமீற்றர் தூண் வரையான பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக உருவாகியுள்ள அபாயத்தைக் குறைப்பதற்காக அப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள உறுதிப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்பாகவும், உறுதிப்படுத்தல் நடவடிக்கைகள் மூலம் மண்சரிவு அபாயத்தைக் குறைக்கும் திட்டத்தின் (RLVMMP) கீழ் மேற்கொள்ளப்படவுள்ள எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் பங்குதாரர்களுக்கு இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) தயாரிக்கப்பட்ட மண்சரிவு அனர்த்த அபாய வலய வரைபடங்கள், கீழ் கடுகன்னாவ பகுதியில் முன்னர் ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் டிட்வா சூறாவளியுடன் ஏற்பட்ட மண்சரிவு நிலைமைகள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, கொழும்பு–கண்டி வீதியின் 96ஆம் கிலோமீற்றர் தூண் முதல் 99ஆம் கிலோமீற்றர் தூண் வரையான பகுதி தற்போது உயர் அபாய வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, அடையாளம் காணப்பட்ட பகுதிகளை உள்ளடக்கும் வகையில் நான்கு வலயங்களில் உறுதிப்படுத்தல் நடவடிக்கைகள் மூலம் மண்சரிவு அபாயத்தைக் குறைக்கும் திட்டத்தின் கீழ் நிர்மாணப் பணிகளை ஆரம்பிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AAIB) வெளிநாட்டு கடன் உதவியாக 80 மில்லியன் அமெரிக்க டொலர்களும், இலங்கை அரசாங்கத்தினால் 21.3 மில்லியன் அமெரிக்க டொலர்களும் உட்பட மொத்தம் 101.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிடப்பட்ட செலவில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் பணிகள் 2027 டிசம்பர் மாதத்திற்குள் நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் பங்கு மற்றும் பொறுப்புகள் குறித்து அந்த அமைச்சின் மேலதிக செயலாளர் விளக்கமளித்தார். உறுதிப்படுத்தல் நடவடிக்கைகள் மூலம் மண்சரிவு அபாயத்தைக் குறைக்கும் திட்டம் தொடர்பான விளக்கத்தை அதன் பணிப்பாளர் பொறியியலாளர் திரு. ஏ. ஏ. விராஜ் டயஸ் வழங்கினார். மேலும், இத்திட்டத்திற்கான வடிவமைப்பை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பொறியியலாளர் கலாநிதி மிஹிர லக்ருவன் அவர்கள் முன்வைத்தார்.

இத்திட்டத்தின் சுற்றுச்சூழல் மற்றும் சமூக விடயங்கள் தொடர்பாகவும், இத்திட்டத்தின் காரணமாக பாதிக்கப்படும் உயர் அபாய வீடுகள் தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் முன்வைக்கப்பட்டுள்ள காணி சுவீகரிப்பு முன்மொழியப்பட்ட வேலைத்திட்டம் தொடர்பாகவும் பங்கேற்பாளர்களுக்கு இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.

அத்துடன், இக்கலந்துரையாடலுடன் இணைந்ததாக, அப்பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்வைப்பதற்கும், அவற்றுக்குத் தேவையான தீர்வுகள் மற்றும் தெளிவுபடுத்தல்களைப் பெற்றுக்கொள்வதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவனெல்ல பிரதேச சபை உறுப்பினர் திரு. அனுர, மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி) திரு. திலீப் நிஷாந்த, மாவனெல்ல பிரதேச செயலாளர் திருமதி விஜயானி ரத்னசேகர, உறுதிப்படுத்தல் நடவடிக்கைகள் மூலம் மண்சரிவு அபாயத்தைக் குறைக்கும் திட்டத்தின் அதிகாரிகள், இத்திட்டத்துடன் நேரடியாகத் தொடர்புடைய அரச நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் கீழ் கடுகன்னாவ பிரதேசத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.