ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்திலும் மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்காக “சுரக்ஷா” திறன் மேம்பாட்டு பகல்நேர பராமரிப்பு நிலையமொன்றை நிறுவும் வேலைத்திட்டத்தின் கீழ், நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டாவது நிலையம் இன்று (29) கேகாலை மாவட்டத்தின் வாரியப்பொல பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தோலங்கமுவ பகுதியில் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

இந்த வேலைத்திட்டம் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் கேகாலை மாவட்ட செயலகம் ஆகியவற்றின் வழிகாட்டுதல் மற்றும் ஒருங்கிணைப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

மாற்றுத்திறனாளி சிறுவர்களை சமூகத்தில் ஒருங்கிணைத்து அவர்களை வலுவூட்டுவதுடன், அவர்களின் பெற்றோருக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த திறன் மேம்பாட்டு பகல்நேர பராமரிப்பு நிலையம் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசாங்கத்தின் “தடையற்ற சமூக வாழ்க்கை – நீதியான சம அணுகல்” என்ற கொள்கையை நடைமுறைப்படுத்துவதே நோக்கமாகும். திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 17 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், இன்று முதற்கட்டமாக 23 சிறுவர்கள் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டனர். திட்டத்தின் இரண்டாம் கட்டம் நிறைவடைந்த பின்னர், மாற்றுத்திறனாளி 100 சிறுவர்களுக்கு வசதிகளை வழங்கும் திறன் இந்த நிலையத்திற்கு கிடைக்கும்.

மாற்றுத்திறனாளி சிறுவரைப் பராமரிப்பது என்பது பெற்றோர் முழுநேரமும் அந்தச் சிறுவர் மீது கவனம் செலுத்தி மேற்கொள்ள வேண்டிய பொறுப்பாகும். அரசாங்கத்தின் முழுமையான கண்காணிப்பின் கீழ், முறையான நடைமுறைகள் மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்களுடன் இந்த “சுரக்ஷா” பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் இயங்குவதால், மாற்றுத்திறனாளி சிறுவர்களைக் கொண்ட பெற்றோர் தமது பிள்ளைகளை நம்பிக்கையுடன் இந்த நிலையத்திற்கு அனுப்புவதற்கான வாய்ப்பைப் பெறுகின்றனர். இதன் மூலம் பெற்றோர்கள் வேலைவாய்ப்பு மற்றும் ஏனைய பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் பங்களிக்க முடியும்.

இந்த நிகழ்வு மாற்றுத்திறனாளி சிறுவர்களால் வழங்கப்பட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் இடம்பெற்றதுடன், நிலையத்தில் பணியாற்றுவதற்காக தினசரி அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பணியாளர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திரு. சரத் ரணவீர அவர்களின் ஒருங்கிணைப்பின் கீழ், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் சமூக சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில, சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்தி, கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான திரு. மனோஜ் ராஜபக்ஷ, கலாநிதி நந்தன மில்லகல மற்றும் திரு. கஞ்சன வெலிபிட்டிய, கேகாலை மாநகர முதல்வர், வாரியப்பொல பிரதேச சபைத் தலைவர், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் மேலதிக செயலாளர்களான திருமதி நாலிகா பியசேன மற்றும் திருமதி ராதா நாணயக்கார, கேகாலை மாவட்ட செயலாளர் திரு. கே. ஜி. எஸ். நிஷாந்த, மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாகம்) திருமதி குசும் பண்டார, சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி தர்ஷனி கருணாரத்ன, வாரியப்பொல பிரதேச செயலாளர் திரு. ரங்கன சஜீவ உள்ளிட்ட அரச அதிகாரிகள், மாற்றுத்திறனாளி சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.