×

செய்தி

Invalid Page Request

கேகாலை மாவட்டத்தை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட கேகாலை மாவட்ட முப்பெரும் கோரளைகளின் இலக்கியக் கலை விழா – 2026 இன் முதலாம் கட்டம் ஒக்டோபர் மாதம் 02 மற்றும் 03 ஆம் திகதிகளில் கேகாலை நிதஹஸ் மாவத்தை வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

கேகாலை மாவட்டச் செயலகம், கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் சபரகமுவ மாகாண கல்வி, தகவல் தொழில்நுட்ப மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியன இணைந்து இவ்விலக்கியக் கலை விழாவை ஏற்பாடு செய்தன.

விழாவின் முதலாம் கட்டம் ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி காலை ஆரம்பமானது. இதன்போது, மாவட்ட இலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன், கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த இதுவரை எந்தவொரு விருதினாலும் கௌரவிக்கப்படாத பதினொரு சிரேஷ்ட கலைஞர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

பல்வேறு நடன நிகழ்ச்சிகளால் வண்ணமயமாக அமைந்த இவ்விழாவில், மாவட்ட மட்டக் கவிதைப் போட்டியில் வெற்றிபெற்ற சில போட்டியாளர்கள் தமது படைப்பாற்றல் திறன்களை வெளிப்படுத்துவதற்கும் வாய்ப்பளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியுடன் இணைந்ததாக, அனுபவமிக்க திரைப்பட இயக்குநர் திரு. சமீர நவத்துன்ன மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி பாத்திமா ஷனாஸ் ஆகியோரின் பங்கேற்புடன் குறுந்திரைப்படங்கள் தொடர்பான விமர்சன நிகழ்ச்சியொன்றும் நடத்தப்பட்டது.

மேலும், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சினால் மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைப் புத்தகத் தொகுதிகள் சில பாடசாலைகளுக்கு அடையாளபூர்வமாக வழங்கப்பட்டன.

இம்முறை மாவட்ட இலக்கியக் கலை விழாவிற்கு கல்வி, தகவல் தொழில்நுட்ப மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு பிரதான அனுசரணையை வழங்கியது. அத்துடன், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் கேகாலை கிளை, ஸ்ரீலங்கா புத்தகசாலை, சீவலி புத்தகசாலை, கொமர்ஷல் வங்கி, மக்கள் வங்கி, இலங்கை வங்கி மற்றும் போகல கிராஃபைட் தனியார் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்களும் அனுசரணை வழங்கின.

இந்நிகழ்வில் மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதகுருமார்கள், சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி, கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகர முதல்வர், பிரதேச சபைத் தவிசாளர், மாவட்ட அரசியல் அதிகாரசபையின் பிரதிநிதிகள், கேகாலை மாவட்டச் செயலாளரும் விழாவின் தலைவருமான திரு. கே. ஜீ. எஸ். நிஷாந்த, அரச அதிகாரிகள், சபரகமுவ மாகாண சபை அதிகாரிகள், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள், கிராமிய அபிவிருத்தி மற்றும் கிராமிய கைத்தொழில் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், கலைஞர்கள் மற்றும் இலக்கிய விழாவின் வெற்றியாளர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.