"காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைப்பதற்காக ஒன்றிணைந்து செயல்படுவோம்" என்ற கருப்பொருளின் கீழ் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மே 30 முதல் ஜூன் 05 வரை நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித் தொடருடன் இணைந்து கேகாலை மாவட்ட நிகழ்ச்சி இன்று (04) ஆரம்பமானது.
இந்நிகழ்ச்சியின் முதல் கட்டமாக யட்டியந்தோட்டை ஸ்ரீவர்த்தன மகா வித்தியாலயத்திலிருந்து யட்டியந்தோட்டை பௌத்த மந்திரம் வரை விழிப்புணர்வு நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மாவட்ட அரசியல் அதிகாரிகள், கேகாலை மாவட்ட செயலாளர், அரச அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதன்போது மாணவர்கள் நகர மக்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தனர்.
நிகழ்ச்சியின் இரண்டாம் கட்டம் யட்டியந்தோட்டை பௌத்த மந்திர வளாகத்தில் நடைபெற்றது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட ஓவிய மற்றும் புகைப்படப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கப் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மேலும், புலத்கொஹுபிட்டிய பிரதேச செயலகத்தின் வீதி நாடகக் குழுவினர், முறையான கழிவு முகாமைத்துவம் இல்லாததன் காரணமாக சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீதி நாடகத்தை அரங்கேற்றினர்.
இந்நிகழ்ச்சி மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையின் கேகாலை மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது.
இந்நிகழ்வில் திரு. நந்தன மில்லகல, யட்டியந்தோட்டை பிரதேச சபைத் தலைவர் திரு. தரிது தேவநாகல, மாவட்ட அரசியல் அதிகாரிகள், கேகாலை மாவட்ட செயலாளர் திரு. கே.ஜி.எஸ். நிஷாந்த, யட்டியந்தோட்டை பிரதேச செயலாளர் திருமதி அனோமா திஸாநாயக்க, மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையின் அதிகாரிகள், கேகாலை மாவட்ட மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை அலுவலக அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





















